டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
அந்தியூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள பட்லூர் நால்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான நடவடிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம் நேற்று ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணி அளவில் அந்த கடை முன்பு தரையில் உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், தாசில்தார் செல்லையா ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் பொதுமக்கள் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து தாசில்தார் செல்லையா, ‘பட்லூர் நால்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கமாட்டோம்,’ என்று தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மாலை 6 மணி அளவில் தங்களுடைய காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே போராட்டம் காரணமாக மதியம் 12 மணி அளவில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க வந்த ஊழியர்கள் கடையை திறக்காமல் அங்கிருந்து சென்றனர்.