மேலூர் அருகே மின் கம்பத்தில் கார் மோதி கடற்படை அதிகாரி பலி பெண் உள்பட 4 பேர் படுகாயம்
மேலூர் அருகே சாலையோர மின் கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படை அதிகாரி பலியானார்.
மேலூர்,
கடலூர் மாவட்டம், நெய்வேலி எம்.ஜி. ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 40). இவர் கேரள மாநிலம் கொச்சி கடற்படை தளத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது சகோதரி காயத்திரி (42) மதுரை வசந்த நகரில் வசித்து வருகிறார்.
கோடை விடுமுறையையொட்டி காயத்திரி தனது மகன்கள் அஜய் பிரகாஷ் (5), கவின்பிரகாஷ்(4), மாமனார் சச்சிதானந்தம் ஆகியோருடன் நெய்வேலிக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் கடற்படை அதிகாரி சரவணகுமார் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அவர் நேற்று தனது சகோதரி காயத்திரி, அவரது மகன்கள் அஜய்பிரகாஷ், கவின்பிரகாஷ், மாமனார் சச்சிதானந்தம் ஆகியோருடன் நெய்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை சரவணகுமார் ஓட்டி வந்தார்.
4 பேர் படுகாயம்கார் மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் வந்தபோது முன்னால் சென்ற ஒரு வாகனம் திடீரென பக்கவாட்டில் திரும்பி உள்ளது. அப்போது சரவணகுமார் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கடற்படை அதிகாரி சரவணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். காரில் இருந்த மற்ற 4 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த நான்கு வழிச்சாலை விபத்து மீட்பு குழுவினர் மற்றும் மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி சேர்த்தனர். இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.