கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் சாவு அண்ணனின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டு திரும்பிய போது பரிதாபம்

கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண் இறந்தார். அண்ணனின் இறுதி சடங்கிற்கு சென்று விட்டு திரும்பிய போது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– விவசாயி சங்கராபுரம் அருகே உள்ள சே‌ஷசமுத்திரம்

Update: 2017-05-13 17:41 GMT

கள்ளக்குறிச்சி,

சங்கராபுரம் அருகே உள்ள சே‌ஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு, விவசாயி. இவருக்கும் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வாணியந்தல் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகள் சித்ரா(வயது 27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் விபத்தில் காயமடைந்து வீட்டில் இருந்த வந்த சித்ராவின் அண்ணன் முருகன், திடீரென இறந்துவிட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சித்ரா தனது கணவருடன் வாணியந்தல் கிராமத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இருவரும் சே‌ஷசமுத்திரம் கிராமத்துக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். சங்கராபுரம்–கள்ளக்குறிச்சி சாலையில் ஆலத்தூர் அருகே சென்ற போது, அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி, இறங்கியது.

போலீசார் விசாரணை

இதில் சித்ரா, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சித்ராவின் தந்தை அண்ணாலைமலை கொடுத்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது இளம்பெண்ணும் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்