போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அரசு பஸ்களை வழக்கம்போல இயக்க நடவடிக்கை சேலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அரசு பஸ்களை வழக்கம்போல இயக்க நடவடிக்கை

Update: 2017-05-13 22:30 GMT

சேலம்,

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்த வைப்புநிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நாளை(திங்கட்கிழமை) பஸ்களை இயக்காமல் காலவரையற்ற வேலைநிறுத்த(ஸ்டிரைக்) போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடத்தினாலும், அன்றைய தினங்களில் வழக்கம்போல பஸ்களை பாதுகாப்பாக இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் சம்பத் தலைமையில் நடந்தது.

பஸ்களை இயக்க முடிவு

கூட்டத்தில் மேட்டூர் சப்–கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) சின்னதம்பி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, அரசு பஸ்களை எவ்வித இடையூறும் இல்லாமல் அன்றைய தினம் இயக்க நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக கலெக்டர் சம்பத் கூறியதாவது:–

ஓட்டுனர்களுக்கு அறிவுரை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களால் நாளை(திங்கட்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொது மக்களுக்கு எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் பஸ்களை இயக்குவது என முடிவு எடுக்கப்பட்டது. போக்குவரத்து பணிமனைகளுக்கும், பஸ் நிலையங்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கிட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய அளவு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பணியில் ஈடுபடுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அந்தந்த வட்டத்தில் இயங்கும் பஸ் நிலையங்கள் மற்றும் பணிமனைகளை தாசில்தார் தலைமையிலான குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் பஸ்கள் இயக்கங்களை தொடர்ச்சியாக கண்காணித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்