‘மனிதனுக்கு வாழ்க்கை நெறியை வழங்கியது புத்தர் காட்டிய பவுத்தமே’ தொல்.திருமாவளவன் பேச்சு

காரைக்குடியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு நிகழ்ச்சியில் ‘மனிதனுக்கு வாழ்க்கை

Update: 2017-05-13 23:00 GMT

காரைக்குடி,

காரைக்குடியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை, ஜெய்பீம் பவுண்டேசன், ஆயுதம் பவுத்த பிரிவு, புத்தர் வழி இதழ் ஆகியவை சார்பில் தென்னிந்தயாவில் பவுத்த கள ஆய்வுகள் என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழகத்தில் பவுத்த அகழாய்வுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. புத்தர் பிறப்பு பெருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நாக்பூர் இந்திய பிக்குனி சங்கத்தை சேர்ந்த பிக்குனி–சுனிதி தலைமை தாங்கினார். சென்னை பிக்கு பதந்த நாகராஜன் முன்னிலை வகித்தார். பிக்கு மகா மவுரியார் வரவேற்றார். நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பஞ்ச சீலக் கொடியை ஏற்றியும், புத்தர் படத்தின் முன் தீப ஒளி ஏற்றியும் வைத்தார்.

வாழ்க்கை நெறி

பின்னர் திருமாவளவன் ஆய்வு நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

பவுத்தம் என்பது வாழ்வியல் நெறி. மனிதத்தின் சமத்துவ கோட்பாடு. பவுத்தம் பல மதங்களில் ஒன்று என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஆனால் பவுத்தம் மதம் அல்ல. அது வாழ்க்கை நெறி. அறிந்து வைத்திருப்பது அறிவு. பிரபஞ்சத்தின் இயக்கம், மனித வாழ்க்கை பற்றி சரியான புரிதலே ஞானம். இதனை புரிந்து வைத்திருப்பவர் ஞானி. உலகிலேயே முதன்முதலாக வாழ்க்கை நெறி தத்துவத்தை மனிதனுக்கு வழங்கியது புத்தர் காட்டிய பவுத்தமே. எதுவும் நிலையானது அல்ல. அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கும். ஆற்றலுக்கு அழிவில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதனை காரல் மார்க்ஸ், ஐன்ஸ்டீன், நியூட்டன் ஆகியோர் சொல்வதற்கு முன்பே கவுதம புத்தர் தனது ஞானத்தால் அன்றே கூறினார். எந்த பாரத்தையும் மனதில் சுமக்காமல், எந்த பாதிப்பையும் மனதிற்கு ஏற்படுத்த முடியாத நிலையில் மனதை வைத்துக் கொள்வதே ஞானம். பவுத்த சமய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. திருவள்ளுவர், அவ்வையார், மணிமேகலை போன்றோர் பவுத்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்ற கருத்தும், வாதமும் தற்போதும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் பெரியார்ராமு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் இளையகவுதமன், மாநில துணை செயலாளர்கள் பெரியசாமி, நந்தன், சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், தெற்கு மாவட்ட செயலாளர் திருமொழி அன்பழகன், எம்.பி. தொகுதி செயலாளர் மல்லை மலைச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்