ராமேசுவரத்தில் மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம் கதவை உடைத்து உள்ளே புகுந்து சேதப்படுத்த முயற்சி
ராமேசுவரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்ட கிராமமக்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 12 டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த 9 கடைகள் அகற்றப்பட்டன. பாம்பனில் மட்டும் 3 கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் மதுபாட்டில் வாங்க மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகரித்தது. இந்தநிலையில் மூடப்பட்ட கடைகளை வேறுபகுதியில் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதற்காக கெந்தமாதனபர்வதம்– சம்பை இடையே தனியார் இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க பணிகள் நடந்து வந்தன. இதுகுறித்து அறிந்த அனைத்து கட்சியினர் மற்றும் கிராம மக்கள் இங்கு அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி தாலுகா, கலெக்டர் அலுவலகங்களில் மனுகொடுத்தனர். இந்நிலையில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட உள்ளதாக கிராம மக்களிடம் தகவல் பரவியது.
முற்றுகைஇதையடுத்து டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முத்தரையர் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் கிராம தலைவர்கள் சம்பை ராமதாஸ், மாங்காடு முனியசாமி, கெதந்தமாதனபர்வதம் முத்துகூரி, வடகாடு நம்புராஜன் மற்றும் அமிர்தபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள்,பெண்கள் டாஸ்மாக்கடையை முற்றுகையிட்டனர்.
தி.மு.க. நகர்செயலாளர் நாசர்கான், தாலுகா செயலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செந்தில், இந்திய கம்யூனிஸ்டு முருகானந்தம், தமிழர் தேசிய முன்னணி கண்இளங்கோ, சமூக ஆர்வலர் தில்லைபாக்கியம் உள்பட அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராமலிங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்–இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும்போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
பேச்சுவார்த்தைஅப்போது முற்றுகையில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் கடை அமைந்துள்ள வளாகக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். பிறகு அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம்போட்டனர். சிலர் டாஸ்மாக் கடையை சேதப்படுத்த அருகில் கிடந்த கம்புகளை எடுத்துச்சென்றனர். அப்போது அவர்களிடம் அறவழியில் போராட்டத்தை நடத்த மற்றவர்கள் கேட்டுக்கொண்டதால் கடையை சேதப்படுத்துவதை கைவிட்டு தொடர்ந்து எதிர்ப்பு கோஷம் போட்டனர்.
இதையடுத்து தாசில்தார் கணேசன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கும்படியும், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பாம்பன் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள 3 கடைகளையும் அகற்றக்கோரி மீனவ மகளிர் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாளை(திங்கட்கிழமை) பாம்பனில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.