திருச்சி மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வில் 95.50 சதவீதம் பேர் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வில் 95.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி ராமகிருட்டினன் தெரிவித்தார்.

Update: 2017-05-12 22:30 GMT

திருச்சி,

தமிழகத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இந்த ஆண்டு ‘ரேங்க்’ பட்டியல் அறிவிப்பு வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ–மாணவிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் பாலக்கரையில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டினன் வெளியிட லால்குடி கல்வி மாவட்ட அலுவலர் காமினிதேவி பெற்றுக்கொண்டார். இந்த ஆண்டு ‘ரேங்க்’ பட்டியல் கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்ததால் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ–மாணவிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

அப்போது ராமகிருட்டினன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:–

95.50 சதவீதம் பேர் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 231 பள்ளிகளில் 36 ஆயிரத்து 281 மாணவ–மாணவிகளில் 36 ஆயிரத்து 94 பேர் எழுதினர். 187 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வெழுதியவர்களில் 34 ஆயிரத்து 474 பேர் தேர்ச்சி பெற்றனர். 5 பேருக்கு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 95.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.65 சதவீதம் ஆகும். இதனை இந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்ச்சி விகிதம் 0.85 சதவீதம் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கல்வி அதிகாரிகள் குயின் எலிசபெத் (முசிறி), ராஜகோபால் (திருச்சி பொறுப்பு), மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் திருஞானம் ஆகியோர் உடன் இருந்தனர்.

செல்போனில் எஸ்.எம்.எஸ்.

பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் பட்டியல் ஒட்டப்பட்டன. இதேபோல மாணவ–மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். வந்தது.

இதில் அவர்களது பெயர், பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் அனுப்பப்பட்டன. இதனால் மாணவ–மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்களது செல்போனிலே அறிந்து கொண்டனர். இதனால் பலர் பள்ளிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. வீடுகள் அல்லது இருந்த இடத்திலேயே தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். இதேபோல மின்னஞ்சல் மூலமாகவும் தேர்வு முடிவுகளை பார்த்தனர்.

வெறிச்சோடிய கல்வி அதிகாரி அலுவலக வளாகம்

பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில் ‘ரேங்க்’ பட்டியலில் இடம் பெற்ற மாணவ,மாணவிகள் அவர்கள் தங்களது பெற்றோருடனும், பள்ளி ஆசிரியர்களுடன் முதன்மை கல்வி அலுவலக அதிகாரி அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெறுவது உண்டு. அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெறுவார்கள். இதனால் தேர்வு முடிவுகள் நாளன்று திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் பரபரப்பாக இருக்கும். பத்திரிகையாளர்களும் மாணவ–மாணவிகளிடம் பேட்டி எடுப்பதும், மாணவ–மாணவிகள் கேக் ஊட்டி, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு ‘ரேங்க்’ பட்டியல் வெளியிடப்படாது என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநில, மாவட்ட அளவில் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ–மாணவிகள் யாரும் வர தேவையில்லாமல் போனது. மாணவ–மாணவிகள் யாரும் வராததால் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்