தலை துண்டிக்கப்பட்டு கொலையானவர், புதுப்பெண் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
நவிமும்பையில் தலை, கால்கள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஒர்லியை சேர்ந்த புதுப்பெண் என்பது தெரியவந்தது.
மும்பை,
நவிமும்பையில் தலை, கால்கள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஒர்லியை சேர்ந்த புதுப்பெண் என்பது தெரியவந்தது.
பெண் உடல்நவிமும்பை ரபாலே பகுதியில் அண்மையில் தலை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றினர். அவரை மர்ம ஆசாமிகள் கொடூரமாக கொலை செய்து உடலை கூறுபோட்டு வீசி சென்றிருந்தது தெரியவந்தது.
தலை இல்லாமல் மீட்கப்பட்ட உடலால் அந்த பெண் யார் என்று கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. மீட்கப்பட்ட பெண்ணின் இடதுதோள் பட்டையில் குத்தப்பட்டிருந்த கணபதி மற்றும் ஓம் என்ற பச்சையை மட்டும் வைத்து அந்த பெண்ணை அடையாளம் காண போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.
அடையாளம் தெரிந்ததுபோலீசாரின் இந்த முயற்சியால் துப்பு துலங்கியது. இதில், அந்த பெண் ஒர்லியை சேர்ந்த பிரியங்கா(வயது24) என்பதும், அவரது கணவர் சித்தேஷ் குரவ்(25) என்பதும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்டது பிரியங்கா தான் என்பதை அவரது உடலில் குத்தப்பட்டு இருந்த பச்சையின் மூலம் டோம்பிவிலியை சேர்ந்த அவரது அக்காள் கவிதா(32) உறுதிப்படுத்தினார்.
மேலும் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. கொலை சம்பவத்திற்கு 5 நாட்களுக்கு முன்னர் தான் பிரியங்காவிற்கு திருமணம் நடந்து உள்ளது. ஒர்லியை சேர்ந்த அவரது காதலர் சித்தேஷ் குரவ் என்பவரை கரம் பிடித்து இருக்கிறார்.
வேலை தேடி...திருமணம் முடிந்த கையோடு பிரியங்கா வேலை தேடிவந்திருக்கிறார். ஒரு நிறுவனத்தில் நேர்முக தேர்வில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சித்தேஷ் குரவ் மனைவியை காணவில்லை என ஒர்லி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் தான் பிரியங்கா தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே திருமணமான 5 நாளில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்து இருக்கிறது.
போலீசார் பிரியங்காவின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கால்களை தேடிவருகின்றனர். மேலும் இந்த கொடூர கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று ரபாலே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாதவ் கூறினார்.
‘கொலையாக போவதை முன்கூட்டியே கூறிய பிரியங்கா’
அக்காள் உருக்கம்
பிரியங்காவின் அக்காள் கவிதா கூறுகையில், கொடூர சம்பவங்கள் பிரியங்காவுக்கு கனவாக வரும். இதுபற்றி அவள் அடிக்கடி என்னிடம் கூறுவாள். தாய், தந்தை இருவரும் நோயால் இறப்பார்கள் என்று கூறினாள். அதேபோல 2005–ம் ஆண்டு எங்களது தாயும், தந்தையும் நோயால் இறந்தார்கள்.
திருமணத்திற்கு ஒரு வாரத்தின் முன் பிரியங்கா பதற்றத்துடன் காணப்பட்டாள். அவளிடம் விசாரித்த போது, என்னை (பிரியங்கா) சிலர் கழுத்தை அறுத்து கொலை செய்வது போன்று கனவு கண்டேன் என்று கூறினாள். இதைக்கேட்டு பதறிப்போன நான், உன்னை யாராவது அச்சுறுத்தி வருகிறார்களா? என கேட்டான். அவள் இல்லை என்று கூறிவிட்டாள். இதனால் நான் அவள் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவள் கனவு கண்டு கூறியது போலவே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள் என்று உருக்கமாக கூறினார்.