துறைமுக வழித்தடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி
துறைமுக வழித்தடத்தில் இணைப்பு கம்பி உடைந்ததால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணிகள் அவதி அடைந்தனர்.
மும்பை,
துறைமுக வழித்தடத்தில் இணைப்பு கம்பி உடைந்ததால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணிகள் அவதி அடைந்தனர்.
தண்டவாள விரிசல்மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் உள்ள செம்பூர்– திலக் நகர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை 9.30 மணியளவில் சி.எஸ்.டி. நோக்கி வரும் வழித்தடத்தில் இணைப்பு கம்பி உடைந்து தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதுபற்றி ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உடைந்த இணைப்பு கம்பியை அகற்றி விட்டு தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
ரெயில் சேவை பாதிப்புபுதிய இணைப்பு கம்பி பொருத்தி தண்டவாளத்தை இணைத்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக பன்வெல், பேலாப்பூர், வாஷி ஆகிய இடங்களில் இருந்து சி.எஸ்.டி. நோக்கி வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. கூட்டம் நிரம்பி வழியும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
காலையிலேயே வெயில் சுட்டெரித்த நிலையில், நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரெயில்களில் இருந்த பயணிகள் புழுக்கத்தால் வியர்வை மழையில் நனைந்தபடி அசவுகரியத்திற்கு ஆளானார்கள்.
இந்தநிலையில், சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளம் சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.