வடமதுரை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

வடமதுரை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-05-12 22:00 GMT

வடமதுரை,

வடமதுரை அருகே உள்ள சுக்காம்பட்டி ஊராட்சி எஸ்.புதுப்பட்டியில், சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு 3 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது அப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களாக அந்த தண்ணீரும் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலரிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று எஸ்.புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ், முகமதுமாலிக் மற்றும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எஸ்.புதுப்பட்டியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 2½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்