காவிரி நிபுணர் குழு அமைக்கும் முடிவை ஏற்கக்கூடாது முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு தேவேகவுடா கடிதம்
‘காவிரி நிபுணர் குழு அமைக்கும் முடிவை ஏற்கக்கூடாது‘ என்று முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
‘காவிரி நிபுணர் குழு அமைக்கும் முடிவை ஏற்கக்கூடாது‘ என்று முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி நிபுணர் குழுகாவிரி நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசின் நீர்ப்பாசனத்துறை முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசின் நீர்ப்பாசனத்துறை கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கடந்த 9–ந் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இதுகுறித்து மூத்த வக்கீல் நாரிமனை சந்தித்து ஆலோசித்து முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:–
காவிரி நிபுணர் குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதுபற்றி நீங்கள் விவாதித்து உள்ளீர்கள். கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் காவிரி நிபுணர் குழு அமைக்கும் முடிவை ஏற்கக்கூடாது.
கடுமையாக எதிர்க்க வேண்டும்வறட்சி காலங்களில் தண்ணீர் பங்கீடு உள்ளிட்ட சில பிரச்சினைகள் காவிரி நடுவர் மன்றத்தால் தான் தீர்க்கப்பட வேண்டும். ஒருதலைபட்சமாக மத்திய அரசால் இதை தீர்க்க முடியாது. கர்நாடக விவசாயிகளின் நலனை காக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை காவிரி நிபுணர் குழு அமைக்கப்படுவதை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் காவிரி வழக்கில் கர்நாடகம் சார்பில் ஆஜராகும் வக்கீல் நாரிமனுக்கும் தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தேவேகவுடா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
நான் போராடினேன்எந்த சூழ்நிலையில் காவிரி நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது என்பது தெரியவில்லை. இந்த காவிரி பிரச்சினை 130 ஆண்டுகள் பழமையானது. நான் முதல்–மந்திரியாக, பிரதமராக பணியாற்றியபோது காவிரி பிரச்சினைக்காக போராடினேன். விதான சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்தேன். காவிரி பிரச்சினையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் நிறைய கஷ்டங்கள் இருக்கின்றன.
வக்கீல் நாரிமன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே காவிரி நிபுணர் குழு அமைக்க எடுத்த முடிவு சரியல்ல. கர்நாடகத்தின் நிலைப்பாட்டை மத்திய நீர்ப்பாசனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். கர்நாடகத்தில் நிலவும் உண்மை நிலையை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.