கோவிலில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி கேட்டு சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

காங்கேயத்தில் கோவிலில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி கேட்டு தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-12 22:00 GMT

தாராபுரம

காங்கேயம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஒதுக்குப்புறமாக கச்சேரி கருப்பணசாமி கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் மிகவும் சிதிலமடைந்து இருந்தது. இந்த கோவிலை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ள அருள்வாக்கு கேட்கப்பட்டது. அதற்கு உத்தரவு கிடைத்ததை தொடர்ந்து, அதே இடத்தில் கடந்த ஆண்டு கோவிலின் திருப்பணி மற்றும் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது.

ஆனால் ஒரு தரப்பினர் இங்கு கோவிலை கட்டக்கூடாது என்று கூறி மனு கொடுத்ததை தொடர்ந்து, தாசில்தார் கோவில் கட்ட அனுமதி மறுத்துவிட்டார். இதனால் கோவில் புனரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு மனு கொடுத்து வந்தனர். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

சப்–கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் காங்கேயத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கச்சேரி கருப்பணசாமி கோவில் உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். உடனே சப்–கலெக்டர் கிரேஸ்பச்சாவு, முற்றுகையிட்ட பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கச்சேரி கருப்பணசாமி கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து, விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சப்–கலெக்டர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தாராபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கேயம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, தாசில்தார் வேங்கடலட்சுமியிடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்