நாகர்கோவிலில் அனைத்துக்கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
குமரி மாவட்ட அனைத்துக்கட்சி சார்பில், கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம், பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் நேற்று ஒரு மனு அளித்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட அனைத்துக்கட்சி சார்பில், கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் தலைமையில், தே.மு.தி.க., இந்தியகம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:–
பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகளின் கருத்தின் அடிப்படையில் அணுகி முடிவுகள் மேற்கொள்வது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்காமலும், அவர்களை மதிக்காமலும் உதாசினப்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். இது மக்கள் விரோத செயலாகும். போலீசாரும், அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூகதலைவர்களுக்கு நெறிமுறைகளுக்குட்பட்டு பதவிவழி மரியாதை வழங்காத நிலைஉள்ளது. இந்த நிலை மாறவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மதுக்கடைகளை மூடவேண்டும். இவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்துக்கட்சி சார்பில் வருகிற 30–ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கலெக்டர் அலுவலகத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான பிரின்ஸ் வந்தார். அரசு திட்டம் தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்துக்கு எம்.எல்.ஏ.க்களை ஏன் அழைக்கவில்லை? என்று கூறி அவர், அங்குள்ள கொடிக்கம்பம் அருகே அமர்ந்து சற்று நேரம் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.