அமைச்சரின் நண்பரான காண்டிராக்டர் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம்

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான நாமக்கல் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2017-05-12 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் - மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் காண்டிராக்டர் சுப்பிரமணியன் (வயது 58). கடந்த மாதம் 7-ந் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள், அவரது நண்பர் என்ற முறையில் காண்டிராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது வெளிநாடு சென்று இருந்த சுப்பிரமணியன் நாடு திரும்பியதும் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு திரும்பிய சுப்பிரமணியன், மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கடந்த 8-ந் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம்

இந்த தற்கொலை சம்பவம் குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு பிரிவு) செந்தில் நியமனம் செய்யப்பட்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுப்பிரமணியன் எழுதிய 4 பக்க கடிதத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.

எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் நாமக்கல் வந்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று விசாரணையை தொடங்குவார்கள் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலைக்கு காரணம்

குறிப்பாக காண்டிராக்டர் சுப்பிரமணியன் எழுதிய கடிதத்தில் அவரது உறவினரான சக காண்டிராக்டர் ஒருவரும், வருமானவரித்துறை உயர் அதிகாரி ஒருவரும் தான் தனது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டு இருந்தார். எனவே அவர்கள் இருவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதலில் விசாரணை நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்