திருச்செந்தூர் அருகே கார்– மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பரிதாப சாவு

திருச்செந்தூர் அருகே கார்– மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-05-12 20:00 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே கார்– மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–

லோடு ஆட்டோ டிரைவர்

ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் கணேசன் (வயது 18). இவர் திருச்செந்தூரில் லோடு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும், திருச்செந்தூரில் இருந்து ஆறுமுகநேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை கடந்து சென்றபோது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

ஆஸ்பத்திரியில் சாவு

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கணேசனை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த சன்னாசி மகன் முத்துசாமியிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்