நெல்லை டவுனில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி அடித்துக்கொலை கணவன்– மனைவியை போலீஸ் தேடுகிறது
நெல்லை டவுனில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
நெல்லை,
நெல்லை டவுனில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
துப்புரவு தொழிலாளிநெல்லை டவுன் தெற்கு மவுண்ட்ரோடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மகன் கணேசன் (வயது 42). இவர் நெல்லை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய தம்பி மகள் முத்துமாரியை, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்ற ராஜா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக கணேசன் குடும்பத்துக்கும், ராஜா குடும்பத்துக்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் இரு குடும்பத்தினரும் அடிக்கடி மோதிக்கொண்டனர்.
அடித்துக்கொலைநேற்று அதிகாலையில் ராஜாவின் தந்தை தங்கராஜூம், தாயார் முத்துலட்சுமியும், அந்த பகுதியில் நடந்து சென்ற கணேசனிடம் குடும்ப பிரச்சினை தொடர்பாக பேசினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த தங்கராஜ், முத்துலட்சுமி ஆகிய 2 பேரும் கணேசனை கம்பாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கினர்.
இதில் காயம் அடைந்த கணேசனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கராஜ், அவருடைய மனைவி முத்துலட்சுமி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்.