வேலூர் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,926 வழக்குகள் பதிவு ரூ.5 லட்சம் அபராதம் வசூல்

வேலூர் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 4 மாதங்களில் மொத்தம் 2,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Update: 2017-05-12 22:45 GMT
வேலூர்,

வேலூர் பகுதியில் கிரீன் சர்க்கிள், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சி.எம்.சி. ரோடு, மக்கான், டோல்கேட், சாரதி மாளிகை, பழைய மீன் மார்க்கெட் போன்ற பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் தலைமையிலான போக்குவரத்துப் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 80 பேர், அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச் சென்றதாக 13 பேர், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 159 பேர், ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார்சைக்கிள்கள் ஓட்டியதாக 879 பேர், அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக 156 பேர், அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதாக 150 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் வாகனம் ஓட்டியதாக 42 பேர் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 4 மாதங்களில் மொத்தம் 2,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.5 லட்சத்து 22 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 53 பேர், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்கள் ஓட்டியதாக 184 பேர் என பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 842 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

கடும் நடவடிக்கை

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 4 மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 3 பேரின் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்