சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதி

சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் நிற்கக்கூட இடமின்றி பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2017-05-12 22:30 GMT

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரமாக சிங்கம்புணரி உள்ளது. தொழில்கள் நிறைந்த நகரமாக சிங்கம்புணரி இருப்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து சிங்கம்புணரிக்கு தொழில் நிமித்தமாக தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது மட்டுமின்றி சிங்கம்புணரி வழியாக காரைக்குடி–திண்டுக்கல் சாலை உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோக பஸ் நிலையம் பின்புறம் வாரச்சந்தை உள்ளது. வாரச்சந்தை நடைபெறும் நாட்களில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் சிங்கம்புணரி வருவது வழக்கம். அவ்வாறு வரும் பொதுமக்கள், வியாபாரிகளில் பலர் சிங்கம்புணரிக்கு பஸ்களில் தான் வருகின்றனர்.

சமீப காலமாக சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால், நிற்கக்கூட இடமின்றி பஸ் நிலைய நுழைவு வாயிலில் நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். மேலும் பஸ் நிலையமும் குறுகலாக இருப்பதால் பயணிகள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.

கோரிக்கை

இருசக்கர வாகனங்களை பஸ் நிலைய வணிக வளாகத்தின் முன்பு நிறுத்திவிட்டு செல்வதால், பஸ் நிலையத்தினுள் வரும் பஸ்கள் சிரமப்படுகின்றன. மேலும் இதனை காரணமாக காட்டி சில பஸ்கள், பஸ் நிலையத்தினுள் வராமல் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் இடையூறாக வாகனங்களை நிறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிங்கம்புணரி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கம்புணரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறும்போது, சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வதால் அரசு பஸ்கள், பஸ் நிலையத்தினுள் வர மறுக்கின்றன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மேலும் பஸ் நிலைய உட்புறம் வாகன நிறுத்துமிடம் தனியாக இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் வாகனங்களை நிறுத்தாமல், இப்படி இடையூறு ஏற்படுத்துகின்றனர். எனவே வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்