400 ரூபாய் தகராறில் விபசார அழகியை கழுத்தை நெரித்து கொன்றவர் கைது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் சிக்கினார்

400 ரூபாய் தகராறில் விபசார அழகியை கழுத்தை நெரித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர். அவர் கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் சிக்கினார்.

Update: 2017-05-11 22:19 GMT

வசாய்,

400 ரூபாய் தகராறில் விபசார அழகியை கழுத்தை நெரித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர். அவர் கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் சிக்கினார்.

பெண் கொலை

பால்கர் மாவட்டம் விரார் மேற்கில் உள்ள பெனிசுலா பார்க் பகுதியில் கடந்த மாதம் 18–ந்தேதி பெண் ஒருவர் துப்பட்டாவால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அர்னாலா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பெண் யார் என அடையாளம் காணப்படவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சம்பவத்தன்று பதிவாகி இருந்த காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர்.

விபசார அழகி

இதில், ஆண் ஒருவர் அந்த பெண்ணுடன் ஆட்டோவில் வந்து இறங்கும் காட்சி பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமரா காட்சியில் அந்த நபரின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணை அழைத்து வந்தவர் விராரை சேர்ந்த சிகந்த் சேக் (வயது43) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசா£ அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் தான் அந்த பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:–

கொலை செய்யப்பட்ட பெண் விபசார அழகி ஆவார். கடந்த 17–ந் தேதி அந்த பெண்ணுடன் சிகந்த் சேக்கிற்கு அறிமுகம் உண்டானது.

கொலையாளி கைது

அவர் அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்காக அந்த பெண் ஆயிரம் ரூபாய் கேட்டார். சிகந்த் சேக் 600 ரூபாய் தருவதாக தெரிவித்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண்ணை 18–ந் தேதி பெனிசுலா பார்க்கிற்கு ஆட்டோவில் அழைத்து வந்து அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து சிகந்த் சேக் உல்லாசம் அனுபவித்தார்.

பின்னர் அவர் பேசியபடி 600 ரூபாயை கொடுத்தார். ஆனால் அந்த பெண் மேலும் 400 ரூபாய் தரும்படி தகராறு செய்திருக்கிறார்.

இந்த தகராறு முற்றியதில் கடும் கோபம் அடைந்த சிகந்த் சேக் அந்த பெண்ணின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்து கொன்று விட்டு ஓடிவிட்டார் என்பது தெரியவந்தது. இருப்பினும் அந்த பெண் பெயர், அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரங்கள் அவருக்கு தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் சிகந்த் சேக்கை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 17–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்