ரூ.14¾ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கல் தலைமறைவாக இருந்த பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் தமிழகத்தில் கைது

தலைமறைவாக இருந்து வந்த பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது 2 மகன்களை தனிப்படை போலீசார் நேற்று தமிழ்நாட்டில் வைத்து கைது செய்தனர்.

Update: 2017-05-11 21:30 GMT
பெங்களூரு,

ரூ.14¾ கோடி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பதுக்கல் மற்றும் ஆள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது 2 மகன்களை தனிப்படை போலீசார் நேற்று தமிழ்நாட்டில் வைத்து கைது செய்தனர்.

பெங்களூரு ஸ்ரீராமபுரம் அனுமந்தநகரில் வசித்து வருப வர் நாகராஜ். இவர், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

ரூ.14¾ கோடி பறிமுதல்

பெங்களூரு நாகரபாவியில் வசிக்கும் தொழில்அதிபர் உமேஷ் என்பவரை கடத்தி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜை கைது செய்ய, அனுமந்தநகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு கடந்த மாதம்(ஏப்ரல்) 14-ந் தேதி ஹென்னூர் போலீசார் சென்றனர். போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட நாகராஜ் வீட்டில் இருந்து தப்பி சென்று விட்டார்.

பின்னர் அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது ரூ.14¾ கோடிக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள், முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்து நாகராஜ் கமிஷன் பெற்று வந்ததும் தெரிந்தது. இதுதொடர்பாகவும் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான நாகராஜை பிடிக்க கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர் மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டன.

2 சி.டி.க்களை வெளியிட்டார்

தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் நாகராஜ் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் தனிப்படை போலீசார் தமிழ்நாடு, ஆந்திராவில் முகாமிட்டு நாகராஜை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். இந்த நிலையில், தன் மீதான வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி நாகராஜ் பெங்களூரு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, நாகராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில், நாகராஜ் தலைமறைவாக இருந்து கொண்டே 2 சி.டி.க்களை வெளியிட்டார்.

அதில், ஒரு சி.டி.யில் தன்னுடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கர்நாடகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சொந்தமானது என்றும், தனது உயிருக்கு போலீசாரால் ஆபத்து இருப்பதாகவும் நாகராஜ் குற்றம்சாட்டி இருந்தார். அதுபோல, நாகராஜ் வெளியிட்ட மற்றொரு சி.டி.யில் போலீஸ் மந்திரி பரமேஸ்வரை தான் நம்புவதாகவும், தன் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால் பரமேஸ்வர் முன்பு 10 நிமிடத்தில் சரண் அடைவேன் என்றும் கூறி இருந்தார். போலீசின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து கொண்டு நாகராஜ் சி.டி.க்கள் வெளியிட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு போலீசாருக்கும் தலைவலியை கொடுத்தது.

கூட்டாளிகள் 8 பேர் சிக்கினர்

இதற்கிடையே தொழில் அதிபர் ஒருவரிடம் பல கோடி ரூபாய் வாங்கி நாகராஜ் மோசடி செய்து விட்டதாகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு பரப்பியதாகவும் நாகராஜ் மீது ஸ்ரீராம புரம் மற்றும் ஹென்னூர் போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவங்களில் நாகராஜின் மகன்களான காந்தி மற்றும் சாஸ்திரி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.

இதனால் நாகராஜின் மகன்களும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். மேலும் கடந்த ஒரு வாரத்தில் நாகராஜின் கூட்டாளிகள் 8 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தி நாகராஜ், அவரது மகன்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

நாகராஜ் கைது

இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தமிழ்நாடு வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தோட்டத்தில் நாகராஜ், அவரது மகன்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று நாகராஜ், அவரது மகன்கள் காந்தி, சாஸ்திரி ஆகியோரை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் நாகராஜ், அவரது மகன்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்றார்கள். அவர்களை போலீசார் தங்கள் வாகனத்தில் துரத்தி சென்றனர். சிறிது தூரத்தில் நாகராஜ் சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்தார்கள். அதன்பிறகு, நாகராஜ், அவரது மகன்கள் காந்தி, சாஸ்திரி ஆகியோரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.

இதுகுறித்து பெங்களூரு கிழக்கு மண்டல சட்டம்- ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உதவியவர்கள் மீதும் நடவடிக்கை

பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரான நாகராஜ், அவரது மகன்களான காந்தி, சாஸ்திரி ஆகியோர் தமிழகத்தில் பதுங்கி இருந்தபோது, அவர்களை இன்று மதியம்(அதாவது நேற்று) கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அஜய் கிலாரி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில்அதிபரை கடத்தி பணம் பறித்தது, ரூ.14¾ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது உள்பட நாகராஜ் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அவரது மகன்கள் மீதும் வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளில் நாகராஜை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்து கொண்டே 2 சி.டி.க்களை நாகராஜ் வெளியிட்டார். போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அதில் அவதூறாக பேசி இருந்தார். அவர் தப்பி செல்ல காரணமாக இருந்தவர்கள் மீதும், சி.டி.க்கள் வெளியிட உதவியவர்களிடமும் விசாரணை நடத்தப்படும். ஏனெனில், கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்த ஒருவருக்கு உதவி செய்வது குற்றமாகும். அவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

காலதாமதம்

போலீசாரிடம் சிக்காமல் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நாகராஜ் தலைமறைவாக இருந்துள்ளார். அவரை கைது செய்ய தாமதம் ஆனது உண்மை தான். பல்வேறு சிம் கார்டுகளை மாற்றி தனது குடும்பத்தினர் மற்றும் வக்கீலிடம் நாகராஜ் பேசி வந்துள்ளார். இதனால் அவரை கைது செய்ய காலதாமதம் ஆனது. நாகராஜை கைது செய்ய சில தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியதாயிற்று.

தமிழகத்தில் கைதான நாகராஜ், அவரது மகன்கள் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் தைரியமாக புகார் அளிக்கலாம். தலைமறைவாக இருந்த நாகராஜ், அவரது மகன்களை கைது செய்த தனிப்படை போலீசாரை, போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் பாராட்டியுள்ளார்.“

இவ்வாறு போலீஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பால்கர் கூறினார்.

மேலும் செய்திகள்