மதுபானக் கடையை அகற்றக்கோரி கல் வீசி தாக்குதல் பெண்கள் உள்பட 19 பேர் கைது

வையம்பட்டி அருகே உள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி 4-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கடை மீது கல்வீசி தாக்கியதாக பெண்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-05-11 22:15 GMT
வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே முகவனூர் ஊராட்சிக்குட்பட்ட டேம் நால்ரோடு பகுதியில் ஒரு மதுபானக்கடை செயல்பட்டு வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி அந்த மதுபானக்கடை மூடப்பட்டது. அந்த கடை வையம்பட்டி-கரூர் சாலையில் பாம்பாட்டிபட்டி பிரிவு சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

அந்த கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பாம்பாட்டிப்பட்டி கிராம மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் கடந்த 8-ந் தேதி முதல் தொடர்ந்து போராடி வருகின்றனர். 8-ந் தேதி அந்த கடையின் முன்பு காத்திருப்பு போராட்டமும், 9-ந் தேதி முற்றுகை போராட்டமும் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

கல்வீசி தாக்குதல்

10-ந் தேதி சம்பந்தப்பட்ட கடைக்கு செல்லும் வழியில் சாலையோரம் பந்தல் அமைத்து கிராம மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் ஒருபுறம் போராடி வரும் நிலையில், மறுபுறம் அந்த மதுபானக்கடைக்கு ஏராளமான குடிமகன்கள் வந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் அந்த மதுபானக்கடை மீது கல்வீசி தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி, வையம்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மதுபானக்கடை மீது கல்வீசி தாக்கியதாக 17 பெண்கள் உள்பட 19 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மதுபானக்கடை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்