மாயனூரில் அரசு மணல் குவாரியை கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்

மாயனூரில் அரசு மணல் குவாரியை கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான லாரிகள் சாலைகளில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-05-11 23:00 GMT
கிருஷ்ணராயபுரம்,

தமிழகத்தில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார ஆற்றுப்பாதுகாப்பு மாயனூர் பிரிவில் மாயனூர், சிந்தலவாடி ஆகிய இடங்களில் அரசு மணல் குவாரி அமைக்க சாலை அமைக்கும் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டது. குவாரிகள் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் 2 யூனிட் மணல் ரூ.1,050-க்கும், 3 யூனிட் மணல் ரூ.1,575-க்கும் விற்கப்படும். எனவே மணல் வேண்டுவோர் செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை, ஆற்றுப்பாதுகாப்பு பிரிவு திருச்சி என்ற முகவரிக்கு டிமாண்ட் டிராப்ட் (டி.டி) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எடுத்துக்கொண்டு வந்து மணலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தொடங்கி வைத்தார்

இதையடுத்து மாயனூர் காவிரி ஆற்றில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மணல் குவாரியை தொடங்கிவைத்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், குளித்தலை கோட்டாட்சியர் சக்திவேல், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், மாயனூர் பிரிவு உதவி பொறியாளர் செல்லமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் குவாரிகளில் மணல் அள்ளி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவே நூற்றுக்கணக்கான லாரிகள் மாயனூர், சிந்தலவாடி பகுதி காவிரி ஆற்றிலும், சாலைகளிலும் அணி வகுத்து நின்றன. முன்பெல்லாம் மணல் அள்ள வரும் லாரிகள் மாயனூர் அருகே லாரி நிறுத்தும் இடத்தில் நின்று வரிசையாக அனுப்பப்பட்டு மணல் வழங்கப்பட்டது. தற்போது எந்தவித முன்ஏற்பாடுகளும் செய்யப்படாததால் லாரிகள் வரிசையாக குவாரிகளை நோக்கி படையெடுத்து நின்றன. இதனால் மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து லாரிகள் உள்ளே, வெளியே செல்ல முடியாமல் தவித்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்