கொண்டலாம்பட்டி அருகே தூக்கில் தொழிலாளி பிணம் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நல்லராயன்பட்டி பகுதி காக்காயன் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 35).

Update: 2017-05-11 22:45 GMT

கொண்டலாம்பட்டி,

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நல்லராயன்பட்டி பகுதி காக்காயன் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). விசைத்தறி தொழிலாளி. இவர் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் குமாரின் மனைவி மயிலா (32) கொண்டலாம்பட்டி போலீசில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னசேலத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டதாகவும், அங்கு இருந்தபோது கணவர் தூக்கு போட்டு இறந்து விட்டதாக தகவல் வந்ததாகவும், இங்கு வந்து பார்த்தபோது கணவரின் உடலில் காயம் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

தனது கொழுந்தன் முத்துவுக்கும், குமாருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் தானும், குழந்தைகளும் ஊரில் இல்லாதபோது இந்த சம்பவம் நடந்து உள்ளதால் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது, இதில் உண்மை கண்டறிய வேண்டும், என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன குமாருக்கு திலிப்குமார் (10), பிரபாகரன் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்