மதுக்கடையை திறக்க வலியுறுத்தியவர்களை விளக்குமாறால் அடித்து விரட்டிய பொதுமக்கள்

மதுக்கடையை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விளக்குமாறால் அடித்து பொதுமக்கள் விரட்டினர்.

Update: 2017-05-11 23:00 GMT
செந்துறை,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மதுக்கடையை திறக்கக்கூடாது என ஒரு தரப்பினரும், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதை தடுக்க மதுக்கடையை திறக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் சுவரொட்டிகளை ஒட்டினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில் நேற்று செந்துறை கக்கன் காலனி பகுதியை சேர்ந்த சிலர் செந்துறை பகுதியில் மூடப்பட்டிருந்த மதுபான கடை முன்பு திரண்டனர்.

பின்னர் அந்த கடையை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் விளக்குமாறுடன் அங்கு திரண்டனர். பின்னர் மூடப்பட்ட மதுக்கடையை திறக்கக்கூடாது. இதற்காக போராட்டம் நடத்தினால் உங்களை விளக்குமாறால் தாக்கி விரட்டுவோம் என தெரிவித்தனர்.

பொதுமக்கள் விரட்டினர்

இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் மதுக்கடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தர்மர் (வயது 52) என்பவர் படுகாயமடைந்தார். அவரை உடன் வந்தவர்கள் மீட்டு செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் பொதுமக்கள் விளக்குமாறால் அடித்து விரட்டினர். மேலும் இனிவரும் காலங்களில் மதுபான கடையை திறக்கக்கோரி யாரேனும் போராட்டம் நடத்தினால் அவர்களுக்கும் இதே நிலைமை தான் ஏற்படும் என்பதை தெரிவிக்கும் விதமாக மதுக்கடை முன்பு விளக்குமாறுகளை தோரணமாக பொதுமக்கள் தொங்கவிட்டுச்சென்றனர். செந்துறையில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்