ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்த புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் நீதிபதிகள் கேள்வி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியது தெரியாதா?
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்த புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம், ஜல்லிக்கட்டுக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியது தெரியாதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த எம்.தெற்குத்தெருவை சேர்ந்த சரவணக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எங்கள் ஊரில் உள்ள முத்துமாரியம்மன்கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு பின்பு சமீபத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு முத்துமாரியம்மன்கோவில் திருவிழாவையொட்டி கடந்த 9–ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்தோம்.
இதற்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் விண்ணப்பித்தோம். ஆனால் எங்களது மனு கடந்த மாதம் 27–ந்தேதி நிராகரிக்கப்பட்டது. இந்த தகவல் எங்களுக்கு தாமதமாக தான் தெரிவிக்கப்பட்டது. இதனால் முடிவு செய்யப்பட்ட நாளில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. எனவே வருகிற 16–ந்தேதி எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கவும், உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஆஜராக உத்தரவுஇந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘ஜல்லிக்கட்டு தொடர்பான அரசிதழில் எம்.தெற்குத்தெரு கிராமத்தின் பெயர் இடம்பெறவில்லை. அதனால் அங்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. கிராமத்தினரின் மனுவை நிராகரித்து கலெக்டர் சார்பில் அவரது நேர்முக உதவியாளர் சாந்தி கையெழுத்திட்டுள்ளார்‘ என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சாந்தியை ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வருத்தம்அப்போது ஆஜரான புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தியிடம், “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 31–ந்தேதியே ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். 3 மாதங்களுக்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மறுத்தது ஏன்?“ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து அவர் நீதிபதிகளிடம் வருத்தம் தெரிவித்தார்.
பின்னர் “புதிய சட்டத்தின்படி மனுதாரர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்“ என்று புதுக்கோட்டை கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.