இளம்பெண் கடத்தல் புகார்: போலீஸ் விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய தொழிலாளி திடீர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

இளம்பெண் கடத்தல் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய தொழிலாளி திடீரென இறந்தார்.

Update: 2017-05-11 23:15 GMT

தேன்கனிக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் அரிபிரசாத். இவரும் ஓசூரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து அரிபிரசாத் தனது நண்பரான தளி அருகே உள்ள நல்லசந்திரம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் (வயது 35) என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து மனைவியுடன் வசித்து வந்தார். ஜெயராமன் ஓசூரில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அரிபிரசாத்திற்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிபிரசாத் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

போலீஸ் விசாரணை

இந்நிலையில் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய மனைவியை காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர் தளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், அரிபிரசாத்தும், ஜெயராமனும் தங்களது மகளை கடத்தி சென்றுவிட்டனர் என கூறியிருந்தனர்.

அதன்பேரில் அரிபிரசாத்தையும், ஜெயராமனையும் தளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய ஜெயராமன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் உடனடியாக ஜெயராமனை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தொழிலாளி சாவு

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயராமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் அவர்கள் தங்கள் மகன் போலீசார் அடித்ததால் தான் இறந்துள்ளார் என புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100–க்கும் மேற்பட்டோர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோவேந்தன் தலைமையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஜெயராமனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

உடலை வாங்க மறுப்பு

இதையடுத்து ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு பணிக்காக 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாசும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் ஜெயராமனின் உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்