நாமக்கல் மண்டலத்தில் 9 நாட்களில் முட்டை விலை 88 காசுகள் உயர்வு 411 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 9 நாட்களில் 88 காசுகள் உயர்த்தப்பட்டு, 411 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2017-05-11 22:30 GMT

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 390 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை மேலும் 21 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 411 காசுகளாக உயர்ந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:– சென்னை–410, ஐதராபாத்–369, விஜயவாடா, தனுகு–346, பார்வாலா–334, மும்பை–401, மைசூரு–401, பெங்களூரு–405, கொல்கத்தா–407, டெல்லி–343.

கறிக்கோழி கிலோ ரூ.80–க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.77–க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

காரணம் என்ன?

நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வயது முதிர்ந்த கோழிகளை பெரும்பாலான பண்ணையாளர்கள் விற்பனை செய்து விட்டனர். இதன் காரணமாகவும், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதாலும் நாமக்கல் மண்டலத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை முட்டை உற்பத்தி குறைந்து உள்ளது.

அதேசமயம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை நீடித்து வருவதால், முட்டைக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் கூறினர்.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3–ந் தேதி முட்டை கொள்முதல் விலை 333 காசுகளாக இருந்தது. அது கடந்த 9 நாட்களில் 88 காசுகள் உயர்ந்து 411 காசுகளாக உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்