தற்கொலை செய்வதற்கு முன்பு நாமக்கல் காண்டிராக்டர் எழுதிய 4 பக்க கடிதம் சிக்கியது உறவினர், அதிகாரி மீது பரபரப்பு குற்றச்சாட்டு

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்து

Update: 2017-05-11 23:15 GMT

நாமக்கல்,

நாமக்கல்– மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் காண்டிராக்டர் சுப்பிரமணியன் (வயது 58). கடந்த மாதம் 7–ந் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவருடைய உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அதே நாளில் அமைச்சரின் நண்பர் என்ற முறையில் நாமக்கல்லில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடந்தபோது சுப்பிரமணியன் வெளிநாடு சென்று இருந்ததால், நாடு திரும்பியதும் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் 2 முறை விசாரணைக்கு ஆஜரானார். 3–வது முறையாக 9–ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு வீடு திரும்பிய சுப்பிரமணியன், மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள பண்னை வீட்டில் கடந்த 8–ந் தேதி குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடிதம் சிக்கியது

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மகன் சபரீஷ் மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இதற்கிடையே, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுப்பிரமணியன் தனது வேலைக்காரர் ஒருவர் மூலம் முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு 4 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு உறவினரும், காண்டிராக்டருமான ஒருவரும், வருமானவரித்துறை உயர் அதிகாரி ஒருவரும்தான் காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டு இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு பிரிவு) செந்தில் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்திலிடம் ஒப்படைக்கப்பட்டது.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதைத்தொடர்ந்து நேற்று அவர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கு விசாரணையை தொடங்கினார். முதலில் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்ட பண்ணை வீட்டுக்கு சென்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் அங்கு தோட்டக்காரராக பணியாற்றி வரும் பெருமாள், அவரது மனைவி ரத்தினம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் நாமக்கல் ஆசிரியர் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டிற்கு வந்த செந்தில், சுப்பிரமணியனின் மனைவி சாந்தி, மகன் சபரீஷ், மகள் அபிராமி, மருமகன் அரவிந்த் மற்றும் உறவினர்களிடம் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.

கையெழுத்தை உறுதி செய்த குடும்பத்தினர்

இந்த விசாரணையின்போது, சுப்பிரமணியன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தையும் அவரின் குடும்பத்தாரிடம் காண்பித்து, இது சுப்பிரமணியனின் கையெழுத்துதானா? என கேட்டறிந்தார். அப்போது அவர்கள் கடிதத்தில் உள்ள கையெழுத்து சுப்பிரமணியனின் கையெழுத்துதான் என உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார், சுப்பிரமணியன் தனது தற்கொலைக்கு காரணம் யார்? என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ள நபர்களிடம் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக கைது நடவடிக்கையும் இருக்கலாம் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்