மத்தூர் அருகே குடிநீர் பிரச்சினையில் இருதரப்பினர் மோதல் அபாயம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

மத்தூர் அருகே உள்ளது ஈச்சங்காடு கிராமம்.

Update: 2017-05-11 22:30 GMT

மத்தூர்,

மத்தூர் அருகே உள்ளது ஈச்சங்காடு கிராமம். ஈச்சங்காட்டில் சுமார் 100 வீடுகளும், ஈச்சங்காடு காலனியில் 20 வீடுகளும் உள்ளன. இந்த காலனியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி ஆகிவிட்டது. தற்போது அதன் அருகில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதன்மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றி ஈச்சங்காடு கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பழைய ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி போய்விட்டதால் காலனியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து காலனியில் உள்ள நீர்த்தேக்க தொட்டிக்கும் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் காலனி மக்களுக்கு மாற்று ஏற்பாடு இருப்பதாக கூறி புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்ய ஊர் முக்கிய பிரமுகர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் சிலர் காலனி பகுதியில் இருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்தனர். இதனால் ஒரே கிராமத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவானது. இதையடுத்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன், மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவர், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆப்தாபேகம் ஆகியோர் இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து காலனிக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அந்த பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்