திருமுல்லைவாயலில் மதுக்கடையை சூறையாடினார்கள் நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் கைது

திருமுல்லைவாயலில் மதுக்கடையை சூறையாடி பேனரை தீ வைத்து எரித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-29 23:58 GMT
ஆவடி,

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அரசு அதிரடியாக மூடியது. இதற்கு பதிலாக குடியிருப்பு பகுதிக்குள் மதுக்கடை திறக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகிறார்கள்.இந்த நிலையில் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அண்ணனூர் சாலையில் புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூறை

பின்னர் கடையை அடித்து நொறுக்கி சூறையாடி கடைக்குள் இருந்து குளிர்பானங்களை எடுத்து வெளியே கொட்டினர். மேலும், கடையில் இருந்த பேனரை கிழித்து தீ வைத்து எரித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அம்பத்தூர்

அதேபோல் அம்பத்தூர் அத்திப்பட்டு சாலையில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநின்றவூர் அடுத்த நத்தம்மேடு பகுதியிலும் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்