நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சித்தராமையா வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்–மந்திரி சித்தராமையா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Update: 2017-04-26 22:00 GMT

மைசூரு,

நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்–மந்திரி சித்தராமையா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்..

நன்றி தெரிவிக்கும் கூட்டம்

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு, சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களான களளே கேசவமூர்த்தி, கீதா மகாதேவ பிரசாத் ஆகிய 2 பேரும் வெற்றி பெற்றனர். எனவே வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடத்த 2 பேரும் முதல்–மந்திரி சித்தராமையாவிடம் அனுமதி கேட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்த நன்றி தெரிவிக்கும் கூட்டம் 26–ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நடந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து மைசூருவிற்கு விமானம் மூலம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு சென்றார்.

வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

அங்கு அம்பேத்கர் பவன் எதிரே உள்ள மைதானத்தில் நடந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சித்தராமையா வாக்களித்த மக்களுக்கு தனது கட்சி சார்பாக நன்றி தெரிவித்துகொண்டார். மேலும் குண்டலுபேட்டை தொகுதியில் மகாதேவ பிரசாத் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் செய்ய நினைத்தாரோ அந்த வளர்ச்சிப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

அந்த தொகுதியில் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு சித்தராமையா அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கீதா மகாதேவ பிரசாத் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நஞ்சன்கூடு...

இதனை தொடர்ந்து மாலை மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தொகுதிக்கு சென்ற சித்தராமையா அங்கு நடந்த நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது இடைத்தேர்தலில் காங்கிரசில் பதவி சுகம் அனுபவித்துவிட்டு சென்றவருக்கு (சீனிவாச பிரசாத்தை மறைமுகமாக) தக்க பாடம் புகட்டிய மக்களுக்கு நன்றி என்று சித்தராமையா கூறினார்.

மேலும் நஞ்சன்கூடு தொகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல்லையும் சித்தராமையா நாட்டிவைத்தார். இதில் களளே கேசவமூர்த்தி எம்.எல்.ஏ, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்