கடும் வறட்சியால் கிணறுகள் வறண்டன ஆழ்துளை கிணறுக்கு மாறும் விவசாயிகள்

காளையார்கோவில் பகுதியில் கடும் வறட்சி காரணமாக கிணறுகள் வறண்டு வருகின்றன. இதையொட்டி விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2017-04-21 23:45 GMT
காளையார்கோவில்,

காளையார்கோவிலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது மந்திக்கண்மாய் கிராமம். இந்த கிராமத்தினரும் சுற்று வட்டாரத்தில் வசிப்போரும் கிணற்று பாசனத்தை வைத்து விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். கிணற்று பாசனத்தை வைத்து தோட்டங்களில் கரும்பு, வாழை, மிளகாய், தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி, சின்ன வெங்காயம், கடலை, சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு, தர்பூசணி, கொத்தவரங்காய் உள்ளிட்ட பல வகையான காய்கறிகளை பயிரிடுகின்றனர்.

இங்கு விளையும் காய்கறிகள் காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து வாரச்சந்தைகள் மற்றும் மதுரை தினசரி மார்க்கெட்டிற்கும் கொண்டு செல்லப்படுகின்றது. கிணற்று பாசனத்தையே நம்பி 150 குடும்பங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் ஒரு இலவச மின் இணைப்புடன் கூடிய பம்புசெட் கிணறு உள்ளது. இந்த கிணறுகள் அனைத்தும் சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டவையாகும். கிணறு வெட்ட ஆரம்பித்த போது 25அடி தான் வெட்டி அதில் உள்ள நீரை பயன்படுத்தி விவசாயம் செய்தனர். நிலத்தடி நீர் மட்டம் குறைய, குறைய ஒவ்வொரு முறையும் அந்த கிணற்றின் ஆழத்தை அதிகப்படுத்தி தற்போது சுமார் 120 அடி வரை ஆழப்படுத்தியுள்ளனர்.

உயர் தொழில் நுட்பம்

வருவாயில் பெரும் பகுதியை இந்த கிணறு வெட்டுவதிலேயே செலவு செய்துள்ளனர். இவ்வளவு ஆழம் சென்ற போதும் போதிய மழையில்லாததால் தற்போது தண்ணீர் இல்லாமல் கிணறுகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் தற்போது ஆழ்துளை கிணற்றுக்கு மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். பலர் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளனர். இது குறித்து ஜான் என்ற விவசாயி கூறியதாவது:–

இந்த பகுதியில் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.4முதல் 5லட்சம் வரை பணம் தேவைப்படுகிறது. அவ்வாறு கிணறு தோண்டும் போது 400 முதல் 500 அடி ஆழம் வரை சென்றால் தான் ஓரளவு தண்ணீர் கிடைக்கிறது. அந்த தண்ணீர் விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை. எனவே ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் விவசாயம் செய்ய முடியாமல் விளைநிலங்கள் தரிசாக காணப்படுகிறது. எனவே நலிந்து வரும் விவசாயத்தை காப்பாற்ற இதுபோல் ஆழ்குழாய் கிணறு அமைக்க முன்வருபவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முன் வரவேண்டும். சரியான நீர் ஊற்று இருக்கும் இடத்தை கண்டறியும் உயர் தொழில் நுட்பத்தை விவசாய துறை மூலம் கிராமங்களுக்கு கிடைக்க செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்