மாவட்டம் முழுவதும் இதுவரை 3,063 ஏக்கரில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 63 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

Update: 2017-04-19 22:02 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசியதாவது:– சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது. பூமிக்கடியில் 75 அடி ஆழம் வரை உள்ள நீரையும் சீமைக்கருவேல மரங்கள் உறிஞ்சி விடுகின்றன. எனவே இயற்கை வளத்தை பாதிக்கின்ற சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகள், நகராட்சிப் பகுதிகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் இதர இடங்களில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை, புறம்போக்கு இடங்கள், தனியார் இடங்கள், நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 431 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றில் இதுவரை 3 ஆயிரத்து 63 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இருமடங்கு அபராதம்

தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அந்தந்த நிலத்தின் உரிமையாளர்களே தாமாக முன்வந்து அகற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு தானே முன்வந்து அகற்றவில்லை என்றால் ஊராட்சியின் மூலம் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, அதற்காக செலவினத் தொகையை இருமடங்கு அபராதத்துடன் நிலத்தின் உரிமையாளரிடம் வசூலிக்கப்படும். நிலத்தடிநீர் பாதிக்கக்கூடிய சீமைக்கருவேல மரங்களை அகற்றிட அரசுத்துறை அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும். பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்திரசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாகுமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்