விமான நிலைய கழிவறை குப்பை தொட்டியில் ரூ.70½ லட்சம் தங்கம்

மும்பை விமான நிலைய கழிவறை குப்பை தொட்டியில் ரூ.70½ லட்சம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2017-04-19 21:11 GMT

மும்பை,

மும்பை விமான நிலைய கழிவறை குப்பை தொட்டியில் ரூ.70½ லட்சம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

குப்பை தொட்டியில் தங்கம்

மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 5–வது கன்வேயர் பகுதியில் உள்ள கழிவறையை நேற்று அதிகாலை துப்புரவு தொழிலாளி ஒருவர் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள குப்பை தொட்டியில் கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட மர்மப்பொருள் கிடந்தது. இது குறித்து போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விரைந்து வந்த சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் குப்பை தொட்டியில் கிடந்த மர்ம பார்சலை எடுத்து பிரித்து பார்த்தனர். அப்போது, அதில் தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 1 கிலோ 307 கிராம் தங்க ஆபரணங்கள், 1 கிலோ 48 கிராம் எடைகொண்ட 9 தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.70 லட்சத்து 65 ஆயிரத்து 520 ஆகும்.

பயணிக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

தங்கம் மீட்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக 5–வது கன்வேயர் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனவே அந்த சமயம் வெளிநாட்டில் இருந்து வந்த பயணி அதிகாரிகளிடம் சிக்கி விடுவோம் என பயந்து கழிவறை குப்பை தொட்டியில் தங்க பார்சலை போட்டு சென்றுள்ளார்.

தங்கத்தை போட்டுச்சென்ற பயணியை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடிவருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்