தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு 25 சதவீத ஒதுக்கீடு கலெக்டர் கருணாகரன் தகவல்
நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களில் இலவச கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களில் இலவச கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.
தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்கள்பள்ளிக்கல்வித் துறையின் மூலம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 2017–18ம் கல்வியாண்டில் தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களில் 25 சதவீத இட ஒதுக்கீடு சேர்க்கை தொடர்பாக, பள்ளிக்கூட முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
நெல்லை மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி 2017–18ம் கல்வியாண்டில் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடங்கள், மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள், மழலையர் பள்ளிக்கூடங்கள், தொடக்கப் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் கல்வி பயில 25 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாக எய்திட வேண்டும். இந்த கல்வியாண்டில் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடங்கள், மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள் மற்றும் மழலையர், தொடக்கப்பள்ளிக்கூடங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 469 இடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
2014–15ம் கல்வி ஆண்டில் 5ஆயிரத்து 190 மாணவர்கள் சேர்க்கப்பட்டு, ரூ.3 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 309 தொகை பெறப்பட்டு, பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2015–16ம் கல்வி ஆண்டிற்கான தொகை இன்னும் ஒரு வார காலத்திற்குள் சம்மந்தப்பட்ட பள்ளிக்கூட முதல்வர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கை கட்டணத்தை பள்ளிக்கூடங்களுக்கு அரசு வழங்குகிறது. எனவே, பள்ளிக்கூட நிர்வாகிகள், இலவசமாக சேர்க்கை வழங்குவதாக கருதக்கூடாது.
இணையதள வழியாக..2017–18ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக நடைபெற உள்ளது. இதற்கான இணையதள வசதிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், நெல்லை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம், நெல்லை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், நெல்லை, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் அனைத்து வட்டார வளமையம், அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு சேவை மையம், அனைவருக்கும் கல்வி இயக்கம், முதன்மை கல்வி அலுவலகம், இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகிய மையங்களில் விண்ணப்படிவத்தினை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தகவல் பலகையில்...இந்த விவரங்களையும், அந்தந்த பள்ளிக்கூடங்களில் உள்ள இட ஒதுக்கீடு விவரங்களையும் பள்ளிக்கூடங்களின் தகவல் பலகை மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளம்பரப்படுத்திட வேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு, விண்ணப்பங்கள் கேட்டு பெற்றோர்கள் வந்தால் எக்காரணம் கொண்டும் நிராகரிக்கவோ, திருப்பியனுப்பவோ கூடாது. விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட பள்ளிக்கூட தலைமை ஆசிரியர், முதல்வர்களே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய வசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள அரசு கல்வி அலுவலகங்களில் கொடுத்து பதிவேற்றம் செய்யலாம்.
சேர்க்கை விண்ணப்பங்கள்இந்த சேர்க்கைக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 18–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண்ணுடன் பள்ளிக்கூட தகவல் பலகையில் 22.05.2017 அன்று தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரத்தை தெரிவிக்க வேண்டும். நிராகரிக்கப்பட்டவர்களின் விவரங்கள், காரணத்துடன் வெளியிடப்பட வேண்டும். அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் அரசு வழிகாட்டுதலின்படி குலுக்கல் முறையில் சேர்க்கையை நடத்திட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் 29.5.2017க்குள் சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் சேர்க்கை செய்யப்பட வேண்டும். அவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் ஏதும் பெறக்கூடாது.
இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் பாலா, சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராஜ் மற்றும் பள்ளிக்கூட முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.