கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-04-18 23:30 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது முத்துரெட்டிகண்டிகை கிராமம். இங்கு குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு மத்தியில் வேறு இடத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மதுக்கடை ஒன்று திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட மதுக்கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடை அமைய உள்ள கட்டிடத்தின் முன்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தலைமையில் கிராமமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச்செயலாளாsரும், சிறுபுழல்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவருமான ரவிக்குமார் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் துளசிநாராயணன், ஒன்றிய நிர்வாகிகள் சிவக்குமார், ஜெயமணி, ரூபன், மகளிர் குழு நிர்வாகி சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுபாட்டில்கள் மாலை

கிராம மக்களில் ஒருவர் தனது கழுத்தில் பூ மாலை அணிந்தும் மதுபாட்டில்களை மற்றொரு மாலையாக அணிந்தும் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவிகளும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முத்துரெட்டிகண்டிகை கிராமத்தில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு இருப்பதை டாஸ்மாக் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிவித்து இங்கு கடையை அமைக்க கூடாது என போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்படும் என அவர் கூறினார்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்