டெல்லியில் போராடுபவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

டெல்லியில் போராடுபவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-18 23:45 GMT

புதுச்சேரி

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநில விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத்தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும், புதுவை அரசு அறிவித்தபடி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்க புதுவை பிரதேச குழு சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

இதற்காக விவசாயிகள் சங்கத்தினர் புதுவை பழைய பஸ் நிலையம் அருகே கூடினார்கள். அங்கிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு விவசாயிகள் சங்க புதுவை பிரதேச தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பெரும்பாலானவர்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக வந்தனர்.

ஒப்பாரி போராட்டம்

ஊர்வலத்தின்போது தாரை, தப்பட்டை போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக ஜென்மாராக்கினி மாதாகோவில் முன்பு வந்தது. அதற்கு மேல் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அங்கேயே கூடி விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், தமிழ்மாநிலக்குழு முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க புதுவை பிரதேச செயலாளர் சங்கர் கரும்பு விவசாயிகள் சங்க தவைவர் வடிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்