சீமை கருவேலம் மரம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரியில் சீமை கருவேலம் மரம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2017-04-18 22:45 GMT
கன்னியாகுமரி,

நிலத்தடி நீரை உறிஞ்சி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சீமை கருவேலம் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், இந்த மரங்களின் தீமைகளை விளக்கியும், அவற்றை அகற்ற வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணை சார்பில் நேற்று சீமை கருவேலம் மரம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், நாகர்கோவில் கோட்டாட்சியர் ராஜ்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் இளங்கோ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நிஜா முதீன், துணை இயக்குனர் (வேளாண்மை விற்பனை) சுரேஷ் ஜோஷ், கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் திலீப்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லூரி மாணவ–          மாணவிகள்

பேரணி அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து தொடங்கி விவேகானந்தா கேந்திரம் வரை சென்றடைந்தது. இதில் பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவ–மாணவிகள், அரசு தோட்டக்கலை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.  

கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் ரூ.4½ கோடி செலவில் 15 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கடந்த 2014–ம் ஆண்டு தொடங்கிய இந்த பணி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. இங்கு மூங்கில் காடுகள், செயற்கை நீர் ஊற்று, சிறுவர் விளையாட்டு பூங்கா, தாமரை தடாகம் போன்ற சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலவிதமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பணியை கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை ஜூலை மாதத்திற்குள் முடிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்