தோவாளையில் பாலப்பணி: தற்காலிக பாதையில் கன்டெய்னர் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

தோவாளையில் பாலப்பணி நடைபெறுவதையொட்டி தற்காலிக பாதையில் கன்டெய்னர் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-04-18 22:45 GMT
ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில்– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தோவாளையில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. மேலும், சில வாகனங்கள் வெள்ளமடத்தில் இருந்து செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு தோவாளை வழியாக சென்ற ஒரு கன்டெய்னர் லாரி தற்காலிக பாதையில் சிக்கியது. லாரியின் சக்கரங்கள் மண்ணில் புதைந்ததால் டிரைவர் கடினமாக முயன்றும் அதை மீட்க முடியவில்லை. இதனால், இந்த பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாற்றுப்பாதையில்           வாகன நெரிசல்

இதைத்தொடர்ந்து, அனைத்து வாகனங்களும் வெள்ளமடத்தில் இருந்து செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி வழியாக மாற்றுப்பாதையில் இயங்கின. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்றதால் ஆரல்வாய்மொழி பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகள் தோவாளைக்கு சென்று சாலையில் சிக்கிய லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இறுதியில் ஜே.சி.பி.  எந்திரத்தின் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.

மேலும் செய்திகள்