டாஸ்மாக் கடைகளுக்கு அருகே பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி திருப்பூர், பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகே பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-04-18 23:00 GMT

திருப்பூர்,

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பா.ஜனதா கட்சி சார்பில் திருப்பூரில் யூனியன் மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி, கோட்ட இணை பொறுப்பாளர் பாயிண்டு மணி, வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது யூனியன் மில் ரோட்டில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். மேலும், காந்தி வேடம் அணிந்த முதியவர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். ஆர்ப்பாட்டத்தையொட்டி அந்த பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

டாஸ்மாக் கடை

அங்கேரிபாளையம் ரோடு ஆசிரியர் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் துணைத்தலைவர் நடராஜ் தலைமை தாங்கினார். 1–வது மண்டல தலைவர் சின்னசாமி முன்னிலைவகித்தார். இதில் கலந்து கொண்ட பெண்கள், மதுவினால் ஏற்படும் தீமைகள் தொடர்பான பதாகைகளை கைகளில் ஏந்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, மண்டல துணைத்தலைவர் துரைராஜ், பொருளாளர் வேலுசாமி, மகளிரணி நிர்வாகி ரேணுபிரியா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் நேற்று திருப்பூர் புதுக்காடு, செல்லம்நகர் பிரிவு, டீச்சர்ஸ் காலனி, எம்.எஸ்.நகர், காலேஜ் ரோடு கொங்கணகிரி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகே பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பல்லடம்

பல்லடம் ஒன்றிய, நகர பா.ஜனதா கட்சியினர் சார்பில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பல்லடத்தில் சோதனைச்சாவடி அருகே செயல்படும் டாஸ்மாக் கடை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பல்லடம் நகர தலைவர் வினோத் தலைமை தாங்கினார்.

கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரஜினி சுப்பிரமணியம், பொதுச்செயலாளர் செந்தில் சண்முகசுந்தரம், கூட்டுறவு பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், பிரசார அணி மாவட்ட துணைத்தலைவர் வெள்ளியங்கிரி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பல்வேறு கோ‌ஷமிட்டனர்.

மதுப்பிரியர்கள் புலம்பல்

திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் பா.ஜனதா சார்பில் டாஸ்மாக் கடை முன் மதியம் 12 மணிக்கு மேல் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்தது. இதனால் 12 மணிக்கு மதுக்கடை திறக்கும் என்ற எதிர்பார்ப்பில் அங்கு வந்த மதுப்பிரியர்கள் கடை திறக்காமல் இருந்ததையும், கடைக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடை எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பில் அங்கும், இங்கும் அலைந்து திரிந்தனர். மது வாங்கி குடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் வந்த மதுப்பிரியர்கள் கடை திறக்க காலதாமதம் ஆனதால் அருகில் உள்ள கடைகளுக்கு முன் அமர்ந்து புலம்பியபடி இருந்தனர். ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு எப்போது கிளம்புவார்கள்? டாஸ்மாக் கடையை எப்போது திறப்பார்கள்? என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

மேலும் செய்திகள்