குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், அந்த கடைக்கு முன்பு நேற்று திரண்டு முற்றுகையிட்டனர்.
கொலக்கம்பை
குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், அந்த கடைக்கு முன்பு நேற்று திரண்டு முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் மின்வாரிய அலுவலகம், 5 பள்ளிக்கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. இது தவிர இந்த பகுதி நகரின் மையப்பகுதியாகவும் உள்ளது. ஆகவே இங்கு டாஸ்மாக் மதுக்கடையை வைக்க கூடாது.
மீறி திறந்தால் மாணவ–மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்கள். அப்போது போலீசார், அந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.