புதுடெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு
புதுடெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் மற்றும் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் புதுடெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 36–வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்த விவசாயிகளுக்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகளும் புதுடெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
கடைகள் அடைப்புஅதன்படி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், காந்தி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறி மூட்டைகளுக்கு தலா ரூ.5 கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் நேற்று வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காய்கறி வியாபாரிகள், தட்டுவண்டி தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களும் பங்கேற்றனர்.
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டை பொறுத்தவரை மொத்த, சில்லறை காய்கறிகள் 200–க்கும் மேல் உள்ளன. அவை அனைத்தும் நேற்று மூடப்பட்டு, காந்தி மார்க்கெட்டின் 2 நுழைவுவாயில்களும் பூட்டப்பட்டன. இதனால் மார்க்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.