உசிலம்பட்டி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த முதியவர் கைது
உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் அழகுமலை (வயது 60).
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் அழகுமலை (வயது 60). இவரின் மனைவி சரஸ்வதி (55). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக சென்றுவிட்டனர். சில வருடங்களுக்கு முன்பு கணவன்–மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அழகுமலை தனியாக பிரிந்து சென்று, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தனது சொத்துக்களை மனைவி, மகள்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டாராம். இந்தநிலையில் மனைவி சரஸ்வதி, தனக்கு ஜீவனாம்சம் கேட்டு கணவர் மீது உசிலம்பட்டி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார். நேற்று சொந்த ஊருக்கு வந்த அழகுமலைக்கும், மனைவிக்கும் வழக்கு சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, முதியவர் அழகுமலையை கைது செய்தனர்.