திருப்பதி, திருச்சானூர் பகுதிகளில் வேலை, பட்டா வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது உதவியாளரும் சிக்கினார்

திருப்பதி, திருச்சானூர் ஆகிய பகுதிகளில் வேலை, பட்டா வாங்கி வருவதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவரும், உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-04-18 22:45 GMT

திருமலை,

கடப்பா மாவட்டம் ஓபுலவாரிப்பள்ளி மண்டலம் பி.பி.ராஜபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்சவுத்ரி. இவர், பி.காம் படித்து விட்டு பால் வியாபாரம் செய்து வந்தார். அதில், அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் ஒரு என்ஜினீயரிடம், மோகன்சவுத்ரி உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அதன் மூலமாக திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் அலுவலர்களையும், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பணக்கார பக்தர்களையும் பழக்கம் செய்து கொண்டு, அந்த என்ஜினீயரிடம் இருந்து விலகி விட்டார்.

தற்போது அவர் திருச்சானூர் அருகே உள்ள சாய்நகர் பஞ்சாயத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தங்கி வந்துள்ளார். அவர் பலரிடம் பண மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக முதலில் திருச்சானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமி, மோகன்சவுத்ரியை பிடிக்க திருச்சானூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார், மோகன்சவுத்ரியை தேடி வந்தனர். அவர், திருச்சானூர் பகுதியில் சுற்றித்திரிந்தபோது போலீசார் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மோகன்சவுத்ரி பல தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:–

பண மோசடி

நான் பி.காம் படித்து விட்டு திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்த்து வரும் ஒரு என்ஜினீயரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தேன். அவரிடம் இருந்தபோது அதிகாரிகள், பக்தர்களை பழக்கம் செய்து கொண்டேன். அதன் மூலமாக பலரிடம் ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டேன். அதற்கான நான், தனது நண்பர்களிடம் எனக்கு எம்.பி. மற்றும் முதல்–மந்திரி அலுவலகத்தில் தெரிந்த ஆட்கள் உள்ளனர். அவர்களை வைத்து பலருக்கு வேலை வாங்கி கொடுத்து வருகிறேன் என்று கூறி வந்தேன்.

எனக்கு உதவியாளராக திருச்சானூரை அடுத்த முறவன்பள்ளியைச் சேர்ந்த கோபி என்பவரை வைத்துக் கொண்டேன். திருப்பதி, திருச்சானூர், சந்திரகிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி கொண்டு மோசடிகளில் ஈடுபட்டு வந்தேன். 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பதி கொர்லகுண்டாவைச் சேர்ந்த டாக்டர் ரவிகுமார் என்பவரிடம் வீட்டுமனையை பதிவு செய்து கொடுப்பதற்காக கூறி ரூ.1 லட்சத்தை வாங்கினேன்.

2 பேர் கைது

ரெயில்வேகோடூரைச் சேர்ந்த மகேஷ் என்பவரின் மனைவியிடம் மின் வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 ஆயிரத்தை வாங்கினேன். அவரின் கணவர் மகேஷிடம் அரசு கட்டிட காண்ட்ராக்ட் வேலைகளை எடுத்துக் கொடுப்பதாக கூறி ரூ.2 லட்சத்தை பறித்தேன். ரெயில்வேகோடூரைச் சேர்ந்த கஜபதி என்பவரிடம் நிலப்பட்டா வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கி உள்ளேன். இதேபோல் பலரிடம் வேலை, பட்டா ஆகியவற்றை வாங்கி தருவதாக கூறி, பல லட்சம் ரூபாயை பறித்து மோசடியில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், யாருக்கும் எந்த வேலைகளையும் நான் செய்து கொடுக்கவில்லை. அதற்குள் என்னை போலீசார் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மோகன்சவுத்ரி கைது செய்யப்பட்டார். இவரின் உதவியாளராக இருந்துவந்த கோபியை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்