மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடை முன்பு பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் 40 பெண்கள் உள்பட 157 பேர் கைது

கடலூரில் டாஸ்மாக் கடை முன்பு பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-18 23:30 GMT

கடலூர்,

தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் 18–ந்தேதி(அதாவது நேற்று) பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கடலூர் கம்மியம்பேட்டை டாஸ்மாக் கடை முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜூ, ஒன்றிய தலைவர் நித்தியானந்தம், நகர பொருளாளர் ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் குணா என்கிற குணசேகரன், டாக்டர் கணபதி, விவசாய அணி அஸ்வின், வர்த்தக அணி அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மதுவை ஒழிக்க வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் தேவநாதன், பொன்னிரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி–குள்ளஞ்சாவடி

பண்ருட்டி அருகே உள்ள காட்டாண்டிக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பாரதீய ஜனதாகட்சியின் ஒன்றிய தலைவர் செல்வமணி தலைமையில் கடையை மூட கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒன்றிய துணைதலைவர் செல்லதுரை, பொது செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைதலைவர் ஆதிமூலம், முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம், இளைஞரணி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கூறி 3 பெண்கள் உள்பட 24 பேரை கைது செய்தனர்.

குள்ளஞ்சாவடியில் கடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பாரதீய ஜனதா கட்சியின் ஒன்றிய வேல்முருகன் தலைமையில் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று, முற்றுகையில் ஈடுபட்ட 21 பெண்கள் உள்பட மொத்தம் 51 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பெண்ணாடம்

பெண்ணாடம் அருகே நந்திமலங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடை உள்பட அனைத்து கடைகளையும் மூடக்கோரி பெண்ணாடம் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, பாண்டியன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேரை கைது செய்தனர்.

புதுச்சத்திரம்

புதுச்சத்திரம் ரெயில்வே கேட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடை முன்பு பாரதீய ஜனதா கட்சியினர் ஒன்றிய செயலாளர் பரமகுரு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 16 பெண்கள் உள்பட 45 பேரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் சிதம்பரம் வி.ஜி.பி. சாலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர்.

புதுப்பேட்டை

புதுப்பேட்டை அருகே திருத்துறையூரில் கோவில் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடையின் அருகே பாரதீய ஜனதா கட்சி சார்பில் அண்ணாகிராம ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, 9 பேரை புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை

இதபோல் குறிஞ்சிப்பாடியில் பெருமாள் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஒன்றிய துணைதலைவர் கதிரேசன் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றுவிட்டனர்.

மங்கலம்பேட்டை அருகே கர்ணத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மங்கலம்பேட்டை பெரியார் சிலை அருகில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் ஆதிதிராவிடர் பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகர செயலாளர் பழனிவேல், ஒன்றிய தலைவர் வேல்முருகன், நகர தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

திட்டக்குடி

திட்டக்குடி பஸ்நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அய்யப்பன் வரவேற்றார். முன்னாள் மண்டல தலைவர் கொளஞ்சி, கஜேந்திரன்சிங், நகர துணை தலைவர் வேல்முருகன், நகர செயலாளர்கள் வேல்முருகன், கென்னடி, எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வகண்ணன், நகர பொருளாளர் கண்ணன், கோட்ட நெசவாளர் அணி பொறுப்பாளர் அய்யப்பன்ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மங்களூர் ஒன்றிய பாரதீய ஜனதாக கட்சி சார்பில் ராமநத்தம் அடுத்த கீழகல்பூண்டியில் ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய பொருளாளர் கொளஞ்சி, ஒன்றிய பொறியாளரணி செயலாளர் சிலம்பரசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்வமணி, மாவட்ட செயலாளர் பொன்பெரியசாமி, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் சுதாகர், ஒன்றிய பொருளாளர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார். சேத்தியாத்தோப்பு அருகே வாழக்கொல்லையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் ஒன்றிய செயலாளர் சபத்கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

157 பேர் கைது

மாவட்டத்தில் காட்டாண்டிகுப்பம், குள்ளஞ்சாவடி, பெண்ணாடம், புதுச்சத்திரம், சிதம்பரம், புதுப்பேட்டை ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றதாகவும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி மொத்தம் 40 பெண்கள் உள்பட 157 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இடங்களில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து, அவர்களாகவே கலைந்து சென்றுவிட்டனர்.

மேலும் செய்திகள்