டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
மங்கலம்பேட்டையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை கர்ணத்தத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை அகற்ற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மங்கலம்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி தலைமை தாங்கினார். மாநில ஊடக அணி துணை செயலாளர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மறியல் செய்ய முயற்சிஇந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென விருத்தாசலம்–உளுந்தூர்பேட்டை சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் ரஜினி, துணை செயலாளர் ராம்குமார், நகர செயலாளர் கண்ணன், குபேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.