கொல்லிமலையில் ரூ.8.86 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
கொல்லிமலையில் 224 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
நாமக்கல்,
கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்புத்திட்டம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொல்லிமலை மலைவாழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, விவசாயிகளுக்க வேளாண் இடுபொருட்களை வழங்கி பேசியதாவது:–
தமிழகஅரசு மாநில சமச்சீர் நிதி சிறப்புத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செய்து, அதில் தேர்வு செய்யப்படுகின்ற பின்தங்கிய வட்டாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டு, 5 வட்டாரங்கள் பின்தங்கிய வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவற்றில் கொல்லிமலை வட்டாரம் மிகவும் பின்தங்கிய வட்டாரமாக தேர்வு செய்யப்பட்டு, இவ்வட்டாரத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இயற்கை வேளாண் உற்பத்திகொல்லிமலையில் விளையக்கூடிய மிளகு, காபி போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்திட விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டும். இதுபோன்ற அதிகபலன் தரக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்வதற்கும், பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் அளிக்க வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் முன்வரவேண்டும். விவசாயிகளின்மீது அரசு அதிக அக்கறைகொண்டு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அதனை மலைவாழ் மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ளவேண்டும். விவசாயத்தில் அதிக லாபம் கிடைத்திட நல்ல யுக்திகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்தொடர்ந்து அவர் கொல்லிமலை பகுதியை சேர்ந்த 150 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் காபி, மிளகு, சவுக்கு கன்றுகள், 12 விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரத்து 400 மதிப்பிலான கைத்தெளிப்பான், 10 விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தேனி வளர்ப்பு பெட்டிகள் உள்பட மொத்தம் 224 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 86 ஆயிரத்து 978 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கொல்லிமலை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணியம், வேளாண்மை இணை இயக்குனர் கலியராஜ், மாநில திட்டக்குழும (வேளாண்மை) துறைத்தலைவர் டாக்டர் ஜெகன்மோகன், மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குனர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.