தர்மபுரி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை கலெக்டர்–எம்.எல்.ஏ. ஆய்வு

தர்மபுரி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டர் விவேகானந்தன், பழனியப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.

Update: 2017-04-18 22:45 GMT

தர்மபுரி,

தர்மபுரி ஒன்றியத்தில் மொத்தம் 28 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு விட்டது. தற்போது நிலவும் கடும் வறட்சியினால் அனைத்து விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகள் சார்பில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டது. இதனால் தர்மபுரி ஒன்றியத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக கலெக்டர் விவேகானந்தன், பழனியப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிதாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தற்போது அவசர கால நடவடிக்கையாக நீரூற்றுகள் உள்ள பகுதிகளை தேர்வு செய்து அங்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

பொதுமக்கள் மனு

இந்த ஆய்வு கூட்டத்தின் போது கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கலெக்டர் விவேகானந்தன், பழனியப்பன் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். மேலும் தர்மபுரி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் காளிதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கவுரி, ஒன்றிய பொறியாளர்கள் கந்தவேல், சீனிவாச பிரபு, ராஜேந்திரன், முன்னாள் பால்வளத்தலைவர் ராஜேந்திரன், ஆவின் துணை தலைவர் பெரியசாமி, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்