மாவட்டத்தில், 7 இடங்களில் மதுக்கடைகளை மூடக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் பெண்கள் உள்பட 125 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி 7 இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-18 23:00 GMT

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை மூடக்கோரி பா.ஜனதாவினர் சார்பில் தர்மபுரி உள்பட 7 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகே உள்ள மதுக்கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தர்மபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வெற்றிவேல், மாவட்ட துணைத்தலைவர் சரவணன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் முனிராஜ், மாவட்ட மகளிரணி தலைவர் விமலா ஆகியோர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரிமங்கலம்–அரூர்

இதேபோல் காரிமங்கலத்தில் நடந்த

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் மாதுகவுண்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மதுவுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் கோ‌ஷங்களை எழுப்பினர். கடத்தூரில் மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமையிலும், பாப்பாரப்பட்டியில் மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாரண்டஅள்ளியில் மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன் தலைமையிலும், அரூரில் ஒன்றிய தலைவர் நந்தகுமார் தலைமையிலும், மொரப்பூரில் ஒன்றிய தலைவர் அய்யப்பன் தலைமையிலும் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 125 பேரை அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்