உழவர் பாதுகாப்பு அட்டை உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள தாதாபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதி வழங்கினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, எங்கள் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்தநிலையில் அந்த வேலைக்கான சம்பளமும் கடந்த 3 மாதமாக எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் வருமானமின்றி நாங்கள் தவித்து வருகிறோம். எனவே உழவர் பாதுகாப்பு அட்டை உள்ள அனைத்து விவசாயிகளின் குடும்பத்துக்கும் வறட்சி நிவாரணமாக தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனர்.